அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானிய கொடியுடன் வந்த ‘துஸ்கா’ (Tuska) என்ற பிரம்மாண்ட சரக்குக் கப்பலை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது.

சுமார் 900 அடி நீளமும், ஒரு விமானம் தாங்கி கப்பலுக்கு இணையான எடையும் கொண்ட இந்த மாபெரும் கப்பல், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்’ (USS Spruance) போர்க்கப்பல் விடுத்த எச்சரிக்கையை மீறி துஸ்கா கப்பல் முன்னேறியதால், அதன் இயந்திர அறையை (Engine Room) அமெரிக்கப் படையினர் துப்பாக்கியால் சுட்டுத் துளைத்து, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், “சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த துஸ்கா கப்பல் நமது பிடியில் சிக்கியுள்ளது; அமெரிக்காவின் தடையை மீற நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பேச்சுவார்த்தைக்குத் தனது தூதுக்குழுவை அனுப்ப ஈரான் மறுத்து வரும் நிலையில், இந்த கப்பல் பறிமுதல் விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலாகியுள்ளது.

“எங்கள் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரானின் ஒவ்வொரு மின் நிலையம் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும்” என டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒருபுறம் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்தாலும், மறுபுறம் நடுக்கடலில் அரங்கேறும் இத்தகைய மோதல்கள் மூன்றாவது உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை அன்று தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிகவும் சிக்கலானதாகக் கருதப்படுகிறது.