அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, தொடங்குவதற்கு முன்பே பெரும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை (Naval Blockade) முழுமையாக நீக்காதவரை, பேச்சுவார்த்தைக்குத் தனது குழுவை அனுப்பப் போவதில்லை என ஈரான் இன்று (ஏப். 20) அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகள் கேள்விக்குறியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தரப்பிலிருந்து துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
“இதுதான் ஈரானுக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு; உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் அந்த நாடே தரைமட்டமாக்கப்படும்” என்று டிரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில் வழக்கம்போல மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்கும், ஹோர்முஸ் ஜலசந்தியில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பல்களுக்கும் அஞ்சப்போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானியக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்படும் வரை இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போவதில்லை என ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது அமலில் உள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் (ஏப். 22) முடிவடைய உள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் முழுவீச்சில் போர் வெடிக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
“முற்றுகையை நீக்கினால் ஜலசந்தியைத் திறக்கத் தயார்” என ஈரான் நிபந்தனை விதிக்க, “முதலில் ஜலசந்தியைத் திறந்தால் தான் முற்றுகையை நீக்குவோம்” என அமெரிக்கா பிடிவாதம் பிடிப்பதால், இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த ஈகோ யுத்தம் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
