அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரீவ்போர்ட் நகரில், ஒரு குடும்ப வன்முறைச் சம்பவத்தின் போது அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் 1 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 8 குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே அதிர வைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், துப்பாக்கி ஏந்திய நபர் பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், கொலையாளி அங்கிருந்து ஒரு காரைத் திருடிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கொலையாளியைத் தீவிரமாகத் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், அந்த மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை “முன்னெப்போதும் இல்லாத கொடூரம்” என்று விவரித்துள்ள காவல்துறை அதிகாரிகள், உயிரிழந்த குழந்தைகளில் சிலர் கொலையாளியின் உறவினர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
1,80,000 மக்கள் வசிக்கும் ஷ்ரீவ்போர்ட் நகரத்தையே உலுக்கியுள்ள இந்தத் துயரச் சம்பவம் குறித்து லூசியானா மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
