கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த பேரழிவைத் தொடர்ந்து கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், குஜிலியம்பாறை பகுதியில் மறைந்திருந்த அவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பதிவு
இந்நிலையில், தவெக துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி விட்டால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இலங்கையிலும் நேபாளத்திலும் இளைஞர்கள் எழுச்சி காட்டியதுபோல் இங்கும் genz தலைமுறை புரட்சி வெடிக்கும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” எனும் கடுமையான சொற்றொடர்களையும் பயன்படுத்தியிருந்தார். இந்த பதிவை பலர் வன்முறையை தூண்டும் வகையிலான கருத்து என எதிர்த்து கண்டனம் தெரிவித்ததால், ஆதவ் அர்ஜுனா அதை பின்னர் நீக்கியிருந்தாலும், அதன் ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.
திமுகவின் கடும் எதிர்ப்பு
ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சியின் செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, “அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு ஊழல்வாதி, கூட்டத்தை காட்டி அரசியல் பேரம் செய்ய நினைத்தான்.
அந்த பேரிழப்பின் சூத்ரதாரி புரட்சி பற்றி பேசுகிறான். புரட்சி என்றால் 100 இன்புளுயன்சர்ஸை பணம் கொடுத்து நிகழ்த்திக் காட்டலாம் என கனவு காண்கிறாரோ?” என்று சாடியுள்ளார். கரூர் பேரிழப்பால் உருவான பதற்ற சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
