கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாரமேடு பகுதியில் கயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கயூப்கானின் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் அணுகவும் என குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் தன்னை திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பணம் கொடுத்தால் துபாயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி கயூப்கான் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து கார்த்திகேயன் துபாய் செல்வதற்கான விசா உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார். அதனை வைத்து துபாய் சென்ற கயூப்கானுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் ஊருக்கு திரும்பி வந்தார். இதனை தொடர்ந்து அவர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு வேலை கிடைக்காதது கூறி பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு கார்த்திகேயன் பணத்தை திரும்ப கொடுக்காமல் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கயூப்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.