தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் மாற்றங்களுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பு வட்டாரங்களிலும் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தவெக-வை ‘பொய்க்கால் குதிரை ஆட்சி’ என்று விமர்சித்திருந்த இபிஎஸ், தற்போது அந்த கட்சிக்கு பின்னால் நடந்துள்ள ஒரு அதிரடி ரகசியத்தை வெளிப்படையாக உடைத்துள்ளார்.

தவெக தற்போதைக்கு ஒரு பொய்க்கால் குதிரை ஆட்சியை அமைத்துவிட்டாலும், தங்களின் பலத்தை நிரூபிக்க குறுக்கு வழிகளைப் கையாள்வதாக அவர் சாடியுள்ளார். ​மேலும் தனது அறிக்கையில் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ள எடப்பாடியார், “தமிழக வெற்றிக் கழகம் தங்களின் ஆட்சியைத் தக்கவைக்க அதிமுகவுக்குள் புகுந்து அநாகரிகமான முறையில் குதிரை பேர வியாபாரத்தை நடத்தியுள்ளது.

எங்களது கட்சியின் ஒருசில நிர்வாகிகளுக்குப் பல்வேறு பதவி ஆசைகளைக் காட்டி, அவர்களை அதிமுகவில் இருந்து பிரித்துத் தங்களது பக்கம் இழுக்க தவெக தீவிரமாக முற்பட்டது என்பது வேதனையான உண்மை” என்று பகிரங்கமாகத் தோலுரித்துள்ளார். பதவிக்காக தவெக நடத்திய இந்த ரகசிய பேரம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோசியல் மீடியாவில் இந்த அறிக்கை தான் தற்போதைய ஹாட் டாப்பிக்!