கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணமலை பசுபதிபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயரில் மாற்றம் செய்ய காத பாறை விஏஓ மாலதியை அணுகி உள்ளார். அப்போது மாலதி ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்தில்குமார் மாலதியிடம் கொடுத்துள்ளார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலதியையும் அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் முனியப்பனையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு கரூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மாலதிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் முனியப்பனுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.