அமெரிக்காவின் வடமேற்கு மியாமி-டேட் பகுதியில் உள்ள ஃப்ரிடாங்கா பினோலாண்டியா என்ற உணவகத்தில் பெண் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.

இது பற்றி மியாமி-டேட் ஷெரிப் அலுவலகம் தெரிவித்ததாவது: ஒரு பெண், மற்றொரு பெண்ணிடம் பணம் கேட்டபோது, அவர் மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சந்தேகநபர், அந்தப் பெண்ணை உணவகத்திற்குள் வரை பின்தொடர்ந்து சென்று தகராறை தொடர்ந்தார்.

இதன்போது, சந்தேகநபர் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் மீண்டும் குத்திய காட்சிகள் NBC6 நிலையம் பெற்ற வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன.

 


தாக்குதலில் பெண்ணின் மேல் மூட்டுகளில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவசர உதவி ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நசீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

22 வயதான டமாரிஸ் ரோட்ரிக்ஸ் என்ற பெண் இந்த தாக்குதலில் தொடர்புடையதாக போலீசார் கைது செய்துள்ளனர். கூர்மையான ஆயுதத்தால் மோசமான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். உணவக உரிமையாளர் பெர்னார்டோ ரூயிஸ் கூறியதாவது: “இந்த இரண்டு பெண்களும் முன்பும் பலமுறை பிரச்சினை ஏற்படுத்தியவர்கள். இந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது” என்றார். மேலும் சம்பவத்துக்குப் பிறகு இரு பெண்களும் அருகில் உள்ள பகுதியில் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.