அலப்புழா மாவட்டம் மராரிகுலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் பாரதியம்மா, திருமணமாகாமல் தான்  சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார். உடல் நிலை மோசமானதும் உறவினர்கள் பாரதியம்மாவை பார்த்துக்கொள்ள முன்வரவில்லை.

2019ம் ஆண்டு செர்தலா அருகே உள்ள மயிதாரா முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த ஆண்டிலிருந்து படுத்தபடுக்கையாக இருப்பதால் ஆராட்டுபுழாவின் சந்த்வனதீரம் முதியோர் இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கும் உறவினர்கள் ஒருவரும் வரவில்லை என்பதை உணர்ந்த பாரதியம்மா, தனது வங்கி சேமிப்பை பெற்றுக்கொள்ள சட்டபூர்வமாக குறிப்பிட்டிருந்த உறவினர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என முதியோர் இல்ல கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார்.

அவரது மன வேதனை மற்றும் நியாயமான கோரிக்கையை மனத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இவை கொண்டு செல்லப்பட்டன. அதன் மூலம், அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புடைய வங்கி ஆவணங்கள் முதியோர் இல்ல கண்காணிப்பாளர் விஜி ஜார்ஜிடம் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக சமூக நீதித்துறை இயக்குநர் டாக்டர் அருண் எஸ் நாயர் கூறுகையில், “முதியோரை கவனிக்க தவறும் உறவினர்களுக்கு அவர்களின் சொத்துகளுக்கு உரிமை கிடையாது.

இதுபோன்ற நிலைகளை எதிர்கொள்கின்ற முதியோருக்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார். பாரதியம்மாவின் துணிச்சலான முடிவு, பல முதியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.