பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், நூலகத்திற்குச் சென்ற மாணவனை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் என்ற மாணவர், கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் படிப்பதற்காக நூலகத்திற்குச் சென்றுள்ளார். நூலகத்திலிருந்து வெளியே வந்த அவரை, ராகுல் மற்றும் குந்தன் என்ற அவரது நண்பர்கள் இருவர் குளிர்பானம் அருந்த அழைத்துள்ளனர். அப்போது, நிதிஷ் குமாருக்குத் தெரியாமல் குளிர்பானத்தில் போதை மாத்திரைகளைக் கலந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

குளிர்பானத்தை அருந்திய சிறிது நேரத்திலேயே நிதிஷ் குமார் சுயநினைவை இழந்தார். அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட கும்பல், அவரை ரகசிய இடத்திற்குக் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாகத் திருமணச் சடங்குகளை நடத்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இது தொடர்பான வீடியோவில், திருமண மண்டபத்தில் நிதிஷ் குமார் முழுமையாகப் போதையில் இருப்பதும், அவரால் சரியாக அமரக் கூட முடியாமல் சரிந்து விழுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அங்கிருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து, மயக்க நிலையிலேயே பெண்ணின் நெற்றியில் குங்குமம் இட வைத்து திருமணத்தை முடித்துள்ளனர்.

திருமணம் முடிந்த பின், சுமார் இரண்டு நாட்களாக நிதிஷ் குமார் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டார். இதற்கிடையே சுயநினைவு திரும்பிய அவர், நடந்த விவரங்களை வீடியோவாகப் பதிவு செய்து தனது குடும்பத்தினருக்கு ரகசியமாக அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டனர். அதிரடியாகச் செயல்பட்ட போலீஸார், சக்ராஜாலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டு நிதிஷ் குமாரை மீட்டனர்.

 

இது குறித்து டி.எஸ்.பி பி.கே.மேதாவி கூறுகையில், “மீட்கப்பட்ட இளைஞரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட புகார்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்தப் பெண் அவரது வீட்டில் உள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் பீகாரில் அவ்வப்போது அரங்கேறும் இந்த ‘பகடோவா விவா’ முறை, மீண்டும் ஒரு இளைஞரின் வாழ்க்கையைப் பாதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நல்ல அரசு வேலை மற்றும் உயர்ந்த பதவிகளில் இருக்கும் நபர்களை கட்டாயமாக கடத்தி சென்று திருமணம் செய்து வைப்பது தான் பகடோவா விவா என்று அங்கு அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.