காசா பகுதிகளில் உணவுத்  பெற மக்கள் கூட்டமாக காத்திருந்தபோது, இஸ்ரேலிய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடுகள் ரஃபா மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் உள்ள இரண்டு உதவி மையங்களின் அருகே நடந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். “உணவுக்காக போனோம், தோட்டாக்களுடன் திரும்பினோம்” என பலர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மக்கள் அடிக்கடி உள்நுழைவதற்காகக் காத்திருக்கும் இடங்களில் இப்படியான தாக்குதல்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது.

இதற்கு பதிலளித்த இஸ்ரேலிய ராணுவம், “அச்சுறுத்தல் ஏற்படுத்திய சந்தேக நபர்களை எச்சரித்து சுட வேண்டிய நிலை ஏற்பட்டது” எனவும், இது ‘எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு’ எனவும் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், மக்கள் உயிரிழப்பை தவிர்க்க எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே பெரும் சோகமாகும்.

உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளதுபோல், காசாவில் ஆயிரக்கணக்கானோர் பேரழிவு தரும் பசியின் விளிம்பில் உள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேலின் தாக்குதல்களில் தற்போது வரை 58,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பது அக்கறையை ஏற்படுத்தும் முக்கியமான புள்ளிவிவரம் ஆகும்.