சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வளசரவாக்கம் சவுத்ரிநகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில், 78 வயது நடராஜன் என்ற குற்றவியல் வழக்கறிஞர், அவரது மனைவி தங்கம் (73), மகன் ஸ்ரீராம் (50), மருமகள் ஷியாமளா (45), பேத்தி ஸ்ரேயா (20) மற்றும் பேரன் ஷர்வன் (17) ஆகியோர் வசித்து வந்தனர்.

தீவிபத்து நிகழ்ந்த நாளில் ஸ்ரீராம், அவரது மனைவி மற்றும் மகளுடன் அடையாறுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தம்பதிகள் நடராஜன், தங்கம், பேரன் ஷர்வன் மற்றும் ராமாபுரத்தை சேர்ந்த வீட்டுப்பணியாளர் சரஸ்வதி (26) மட்டும் இருந்தனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் நடராஜனும் தங்கமும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேல் மாடியில் இருந்த ஷர்வன் மற்றும் சரஸ்வதி இருவரும் உயிர் தப்பிக்க முதல் மாடியிலிருந்து கீழே குதித்தனர்.

இதனால் படுகாயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பணிப்பெண் சரஸ்வதி நேற்று உயிரிழந்துள்ளார். இதனால் இந்த தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3-ஆக உயர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தீவிபத்திற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.