தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் பக்தர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், பூஜை பொருட்கள் விற்பனை மற்றும் விலை குறித்த முக்கிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நியாயமான விலையில் பூஜை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கான விலைப்பட்டியலை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வண்ணம் வெளிப்படையாக வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது, தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் மற்றும் பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது போன்ற கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இத்துடன், MRP எனப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்கக் கூடாது என்றும், கோவில் வளாகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, மஞ்சள் துணிப்பைகள், மூங்கில் கூடைகள் மற்றும் காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிலின் நுழைவாயில்கள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கக் கூடாது என்றும், கடையைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சந்தை விலையைக் கருத்தில் கொண்டு, அரசு அனுமதித்த விலையிலேயே வியாபாரிகள் பொருட்களை விற்க வேண்டும் என்றும், விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.