தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 16.83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ஆன்லைன் மூலம் டெண்டர் கோரப்பட்டது.
மேலும் பொதுவாக டெண்டர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஒப்பந்ததாரர்களுக்குக் குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த டெண்டர் நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கி, மதியம் 3 மணிக்குள், அதாவது வெறும் 6 மணி நேரத்திற்குள்ளாகவே அவசர அவசரமாக முடிக்கப்பட்டதாக ஆன்லைனில் காட்டப்பட்டுள்ளது.
இது குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டுமே இந்த ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அதிகாரிகள் இவ்வாறு செயல்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. அவசரப் பணிகளுக்காகவே இதுபோன்று குறுகிய காலத்தில் டெண்டர் விடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையிலும், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த டெண்டர் முறைகேடு புகார் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் என். ஆனந்தின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, அவர் உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், இந்த முறைகேடு புகாரில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் சாந்தி மற்றும் கயல்விழி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
