தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது மக்கள் சந்திப்புப் பொதுக்கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தி, பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார். அதன்படி, வரும் வியாழக்கிழமை அன்று ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு மக்களுடன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதற்கான பதில் மற்றும் தேவையான ஆவணங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடம் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து பொதுக்கூட்டத்திற்கான அனுமதி பெறப்படவில்லை என்று, கோவில் செயல் அலுவலர் தரப்பில் காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி பெறுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.
