தாய்லாந்தில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை, அவனது காதலிக்கே மாத வாடகைக்கு விட முன்வந்த மனைவியின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவான் என்ற அந்தப் பெண், தனது கணவர் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், அவர் வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருப்பதையும் தனியார் துப்பறியும் நிபுணர் மூலம் கண்டுபிடித்தார்.
மேலும் பொதுவாக இதுபோன்ற சூழலில் பெண்கள் விவாகரத்து அல்லது சட்ட நடவடிக்கையை நாடுவார்கள். ஆனால், குவான் ஒரு மாறுபட்ட முடிவை எடுத்து, தனது கணவருடன் வாழ வேண்டுமானால் அவரது காதலி மாதந்தோறும் 30,000 இந்திய மதிப்பில் சுமார் 85,000 ரூபாய் வாடகையாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்.
இந்த விசித்திரமான சலுகையை கணவரின் காதலியும் உடனடியாக ஏற்றுக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பணத்தைப் பற்றி கவலையில்லை என்றும், அவருடன் வாழ்வதே முக்கியம் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார். இருப்பினும், தனது மனைவி தன்னை “வாடகைக்கு” விடுவதை அறிந்த கணவர், தனது சுயமரியாதை பாதிக்கப்படுவதாகக் கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்து சட்ட வல்லுநர்கள் இத்தகைய ‘கணவர் வாடகை ஒப்பந்தம்’ சட்டப்படி செல்லாது என்று எச்சரித்துள்ளனர். தற்போது இந்தப் பெண் தனது கணவரின் காதலிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வினோதமான குடும்பத் தகராறு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
