ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு நபர் கடையின் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தனது சமநிலையை இழந்து கீழே விழுந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த இந்த விபத்து முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 25 வயதான நஜீர் என்ற தொழிலதிபர், மாலை 5:50 மணியளவில் பால்கனியில் தண்ணீர் குடித்தபடி நின்றிருந்தார். அப்போது திடீரென அவரது சமநிலை தவறி, பால்கனியின் சுவரைத் தாண்டி கீழே விழுந்தார்.
நஜீர் கீழே விழும்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரின் மீது விழுந்தார். இதனால் அவருக்கு பெரிய காயங்கள் ஏற்படவில்லை, ஆனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நஜீருக்கு காலில் முறிவு ஏற்பட்டிருந்தாலும், அவர் உயிர் பிழைத்தது பெரும் அதிசயமாகக் கருதப்படுகிறது. விபத்து நடந்தவுடன், இரண்டு பேர் உடனடியாக அவருக்கு உதவுவதற்காக ஓடி வந்தனர். 10 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், நஜீர் தண்ணீர் பாட்டிலுடன் பால்கனியின் விளிம்பில் நடப்பதையும், திடீரென சமநிலை இழந்து கீழே விழுவதையும் பார்க்க முடிகிறது.
Jodhpur, Rajasthan ‼️
A cloth merchant fell from the 3rd floor.
The entire incident was caught on CCTV. pic.twitter.com/MsXs8UqdlE— Deadly Kalesh (@Deadlykalesh) September 18, 2025
இந்த சம்பவத்தின் வீடியோ @Deadlykalesh என்ற பக்கத்தில் பகிரப்பட்டு, தற்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. வீடியோவில் நஜீர் விழுந்தவுடன் உரத்த சத்தம் கேட்கிறது, பின்னர் அதே மாடியில் இருந்து இரு நபர்கள் பால்கனியை நோக்கி ஓடி வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த பலர், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க பால்கனிகளில் பாதுகாப்பு கிரில் அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஒரு பயனர், “இப்படி பாதுகாப்பு இல்லாத பால்கனியை யார் கட்டினார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மற்றொருவர், “இது நேரத்தின் விளையாட்டு. அங்கு ஒரு குழந்தை இருந்திருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கலாம்” என்று கூறினார். மற்றொரு பயனர், “இவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயமே” என்று குறிப்பிட்டார்.
