திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வித்தியாசங்கர். இவர் அதே பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல நேற்று மாலையில் அவர் நகை செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டரில் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை உடனடியாகக் கவனித்த அங்கிருந்த நபர்கள் எந்தவித தாமதமும் இன்றிப் பாதுகாப்பாக வெளியே ஓடிச் தப்பினர்.

அவர்கள் வெளியேறிய சில விநாடிகளிலேயே சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தின் வீரியம் காரணமாக, நகை செய்யும் இயந்திரங்களிலும் தீ மளமளவெனப் பரவியதுடன், அந்த முழு கட்டிடத்திலிருந்தும் வானுயரக் கருப்புப் புகை கரும் மேகம் போலள கிளம்பியது. இதனால் அந்தப் பகுதியே சற்று நேரம் புகை மண்டலமாகக் காட்சியளித்ததுடன், அக்கம் பக்கத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்துத் தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புத்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடித் தீயைக் முழுமையாக அணைத்தனர். எனினும், இந்த கோர விபத்தில் பட்டறையில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தீயில் கருகி முற்றிலுமாகச் சேதமடைந்தன. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிலிண்டர் வெடித்ததற்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.