உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மனமுடைந்த ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், ரோஹித் குமார் யாதவ் (28) என்பவர் உயிரிழந்ததுடன், காஜல் கௌதம் (24) என்பவர் இரண்டு கால்களையும் இழந்து தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பதோஹி-வாரணாசி எல்லை பகுதியில் உள்ள கந்தியா ரயில்வே கிராசிங் அருகே நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேரில் கண்ட சாட்சிகளின் தகவலின்படி, இருவரும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ரயில் பாதையை நோக்கி நடந்துச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே ரோஹித் உயிரிழந்தார். காஜலை பதோஹி மகாராஜா பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில் தொடக்க சிகிச்சைக்குப் பிறகு, அவரது நிலைமை மோசமாக உள்ளதால் வாரணாசி பிஎச்யு மருத்துவமனையின் தீவீர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.

இருவரும் கடந்த ஒரு வருடமாக காதல் உறவில் இருந்ததாகவும், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.