அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரில் சிக்கியுள்ள ஈரானுக்கு, இந்தியா தனது முதல் கட்ட மருத்துவ உதவித் தொகுப்பை வழங்கியுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய இந்தப் பொருட்களை ‘ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி’யிடம் இந்தியா ஒப்படைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், “இந்தியாவின் தயாள குணம் கொண்ட மக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளது. பல நாடுகள் உதவி செய்ய மறுத்த நிலையில், இந்தியா தனது கப்பல்கள் மற்றும் மருத்துவ உதவிகள் மூலம் ஈரானுக்குப் பெரும் பலமாக நின்றுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

​ஈரானுக்கு உதவ விரும்பும் இந்தியர்கள் பலர் தங்களைத் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்துள்ள ஈரான் தூதரகம், தற்போது சில தொழில்நுட்பக் காரணங்களால் ஆன்லைன் மற்றும் GPay மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. எனவே, நிதியுதவி அளிக்க விரும்பும் ஆர்வம் கொண்ட இந்தியர்கள் டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரடியாக வந்து ரொக்கமாக வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த இக்கட்டான சூழலில் ஈரானுக்கு உதவ மறுத்த நாடுகளுக்கு இன்னும் சில நாட்களில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தூதர் முகமது ஃபதாலி எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.