திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில், பைக்கில் வந்த மர்மக் கும்பல் ஒன்று அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பிரம்மதேசம், வாகைகுளம், மற்றும் நெட்டூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்போக்கர்கள் 6 பேரை இந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது. இந்தச் சம்பவத்தால் இரு மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யக் காவல்துறையினர் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் களமிறங்கினர்.

​பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் காவல் படை குவிக்கப்பட்டு, இரு மாவட்ட எல்லைகளிலும் தீவிர வாகனச் சோதனை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காவல்துறையினரின் இந்த மின்னல் வேக ஆக்ஷனால், இந்தத் தொடர் தாக்குதலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் (சிறார்கள்) உட்பட மொத்தம் 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தற்பொழுது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.