தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்..

சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்து நேரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதன் பின் அவர் நெல்லைக்கு வந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு நிவாரணம பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் வீடுகளை இழந்தோருக்கு ரூபாய் 10,000 நிவாரணம் வழங்கப்படும்.

வெள்ளத்தில் சேதமடைந்த விலை நிலங்களுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 17,000 நிவாரணம் வழங்கப்படும். அதி கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூபாய் 6000 வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடியில் லேசான பாதிப்புக்குள்ளான வட்டங்களில் உள்ளவர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும்.

மேலும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கன மழையால் பலியான எருது, பசுவுக்கு இழப்பீடாக ரூபாய் 37 ஆயிரத்து 500 அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வெள்ளாடு, செம்மறியாடு ஒன்றுக்கு இழப்பீடாக ரூபாய் 4000 வழங்கப்படும்.

அதிக கன மழையால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 17000 வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்லாண்டு பயிர்கள், மரங்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் ரூ.8,500 அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதம் அடைந்த படகுகள்  மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளை பொறுத்தவரையில் முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு,  மீன்பிடி வலைகள் உட்பட 32 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ஆகவும், பகுதியாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு  10,000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும்,

முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானிய தொகை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திர படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானிய தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கிடவும்….  சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 10,000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

வானிலை மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென் மாவட்டங்களில் பெய்தது. சில இடங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1801 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது தவணை தானே தவிர கூடுதல் நிதி அல்ல. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய தவணையை தான் மத்திய அரசு வழங்கி உள்ளது” என தெரிவித்துள்ளார்.