
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடி அவர்களே நான் உங்களை எச்சரிக்கிறேன், இன்று அண்ணா கல்லறையின் முன்பு நின்று சொல்கின்றேன் நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரே நாடு என்றால் இந்தி பேசுகின்ற நாடு மட்டும்தான் இருக்கும். ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்ற உறுதி மொழியை தொடர்ந்து நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
தற்போது வந்திருக்கின்ற ஆபத்து ஜனநாயகத்திற்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தாக பார்க்கிறோம். இது முழுக்க முழுக்க சம நீதிக்கு வந்துள்ள ஆபத்து. தமிழ் இனத்திற்கு என்ற உணர்வோடு மதிமுக சார்பாக எங்களுடைய கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சி உள்ள மாநிலமாக அமைய வேண்டும் என்று அறிஞர் அண்ணா கூறினார். ஆனால் இன்று அதனை மோடி குழி தோண்டி புதைத்து விட்டார் என வைகோ மோடியை விமர்சித்துள்ளார்.