கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, தூங்கிக் கொண்டிருந்த கணவனை கழுத்தை அறுத்து மனைவி கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி இந்திராநகர் ஊராட்சி பி2 பிளாக் பகுதியில் உள்ள மாற்று குடியிருப்பில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன் (62). இவர் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர். தற்போது நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பத்மாவதி, முதலில் வேறொருவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றவராவார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் கொளஞ்சியப்பனும் பத்மாவதியும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டதாகவும், மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே, இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது. குறிப்பாக, பத்மாவதி தனது கணவனின் நடத்தையில் சந்தேகப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஒரு மாதத்துக்கு முன்பு அவர் நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக மீண்டும் மீண்டும் தகராறுகள் ஏற்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு, கொளஞ்சியப்பன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பத்மாவதி கத்தியால் அவரை கழுத்தில் அறுத்து கொன்றார். சம்பவத்திற்கு பிறகு, பத்மாவதி தனது உறவினர்களிடம் தொலைபேசியில் சம்பவத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த உடனே,  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொளஞ்சியப்பனின் உடல் ரத்தத்தில் புரண்ட நிலையில் மீட்கப்பட்டு, விசாரணைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பத்மாவதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கணவன்-மனைவிக்கிடையேயான குடும்ப தகராறு பின்புலமாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொடூர சம்பவம், நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.