உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில், ஓடும் ஸ்கார்பியோ காரில் ஒரு இளைஞர் ஆபத்தான ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்பத் (பாபு கார்) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

வீடியோவில், அந்த இளைஞர் SUV-யின் இரு முன் கதவுகளையும் திறந்தவாறு காரை ஓட்டுகிறார். பின்னர், ஸ்டீயரிங்கை கவனிக்காமல் பயணிகள் இருக்கையின் வழியாக வெளியேறி, கார் நகர்ந்து கொண்டிருக்கும்போது பானட்டில் ஏறி நிற்கிறார். இந்த காட்சி, அருகில் சென்ற மற்றொரு காரில் இருந்து பதிவு செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த வைரல் வீடியோவை அடுத்து, ஹாபூர் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இளைஞரை கைது செய்தது.

இந்த ஆபத்தான ஸ்டண்ட் காரணமாக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு ரூ.28,500 அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.30,500 அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டது. ஹாபூர் காவல்துறை, X தளத்தில் பதிவிட்டு, குற்றவாளியை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்ததாக உறுதிப்படுத்தியது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “ஹாபூரில் ஓடும் ஸ்கார்பியோ காரின் ஸ்டீயரிங்கை விட்டுவிட்டு, பானட்டில் ஏறி ஸ்டண்ட் செய்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை உடனடியாக கவனித்து, குற்றவாளியை காருடன் கைது செய்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் ,ரூ.30,500 அபராதம் விதிக்கப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.