கோவை சூலூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல், உடற்கூராய்வு (Postmortem) முடிவடைந்த நிலையில் இன்று அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், சிறுமியின் உடல் ஒப்படைக்கப்பட்ட போது மருத்துவமனை வளாகமே கண்ணீர்க் கடலாகக் காட்சியளித்தது.
கோவை இஎஸ்ஐ (ESI) மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறுமியின் உடற்கூராய்வு மிகத் தீவிரமாக நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர், அழுது துடித்த பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்காகத் தற்போது அவசர அவசரமாக அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. சிறுமியின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுவதையொட்டி, அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கக் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
