கர்நாடக மாநிலம் ஹாவேரி மத்திய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை காலை சுமார் 7 மணியளவில், பேருந்துக்காக பயணிகள் நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நடைமேடைக்குள் புகுந்தது. அங்கிருந்த பயணிகள் மீது பேருந்து மோதியதில், தனது பெற்றோருடன் நின்றுகொண்டிருந்த 2 வயது சிறுவன் ஹஸ்ரத் அலி படுகாயமடைந்தான்.
உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்தது அவனது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பாங்காபூரைச் சேர்ந்த வாசுதேவ் (44), ஹர்ஷா (6) மற்றும் காவ்யாஞ்சலி (39) ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Karnataka’s reckless KSRTC bus driver!
At Haveri Central Bus Stand at 7am today
2yr old boy killed, three others hospitalised..driver on the run pic.twitter.com/oDa39o1a13
— Nabila Jamal (@nabilajamal_) April 1, 2026
பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பேருந்தை ஓட்டி வந்ததே விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்து நடைமேடைக்குள் புகுந்து பயணிகள் மீது மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஹாவேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
