தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நந்திப்பேட்டை நகரைச் சேர்ந்த குதவன்பூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்.  சமீபத்தில் வகுப்பின் போது சில மாணவர்கள் ஒழுங்கின்றி நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த சங்கர், அவர்கள் மீது மிளகாய்ப் பொடியை நேராக கண்கள் மற்றும் காதுகளில் தூவியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதில் பல மாணவர்கள் வேதனையால் கதறி அழுதனர்.

தாங்கள் சந்தித்த துயரை பெற்றோரிடம் தெரிவித்த மாணவர்களின் குறையை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களையும் சங்கர் தவறாக பேசினார் என கூறப்படுகிறது.

இதையடுத்து பொது மக்கள் மற்றும் மாணவ—மாணவியரின் பெற்றோர், போலீசாரிடமும் கல்வித்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் பள்ளிக்கு வந்தபோது ஆசிரியர் சங்கர் தலைமறைவாகிவிட்டது. தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.