மேற்கு வங்க மாநிலத்தின் தர்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான ராகுல் மஹதோ என்பவர், தனது பிறந்து 3½ மாதங்கள் ஆன பெண் குழந்தையை கொலை செய்ததாகக் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட தொடக்க விசாரணையில், பீகாரைச் சேர்ந்த பிரியங்கா மகதோ என்பவர், ராகுலுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 3½ மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து ராகுலும், அவரது வீட்டார் பலமுறை பிரியங்காவை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

“பெண் குழந்தை பிறந்ததிலிருந்து அடிக்கடி சண்டை. என் பிள்ளையை யாரும் பார்ப்பதே இல்ல, கை கூட வைக்க மாட்டார்கள். குழந்தையை கொல்லப்போவதாகப் பயமுறுத்தியும் இருந்தார்கள்,” என கூறியுள்ள பிரியங்கா, மேலும் “அந்த இரவு வரை குழந்தை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் மறுநாள் காலை தூக்கத்தில் இருந்தபோதே அவளை கொன்றுவிட்டார்கள்” எனக் கதறியுள்ளார்.

பிரியங்கா அளித்த புகாரின் பேரில் ராகுல் மஹதோவை போலீசார் கைது செய்தனர். ஆனால் ராகுல் தனது மீது வந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “நான் தூங்கிக்கொண்டிருந்தேன். விழித்தபோது குழந்தை அசையவில்லை. நான் கொலை செய்யவில்லை. பிரேத பரிசோதனைதான் உண்மையை வெளிக்கொண்டுவரும் ” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனரேட் துணை ஆணையர் ராகேஷ் சிங் கூறுகையில், “ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறப்பு காரணம் விசாரணையின் பின்னர் உறுதி செய்யப்படும்” என தெரிவித்தார்.
