மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தின் கன்னட் காட் பகுதியில், சத்ரபதி நகரில் இருந்து சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில், 59 பேருடன் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து கன்னட் காட் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் ஸ்டீயரிங் ராடு  திடீரென உடைந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.

59 பயணிகளுடன் அதிவேகமாகச் சென்ற அந்தப் பேருந்து, சில விநாடிகளில் மலைப்பாதையின் பாதுகாப்புச் சுவரில் மோதி நின்றது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு அச்சத்தில் உறைந்தனர். பேருந்து பாதுகாப்புச் சுவரில் மோதி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒருவேளை சுவரில் மோதாமல் இருந்திருந்தால், பேருந்து நூற்றுக்கணக்கான அடி ஆழமுள்ள திறந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

 

பேருந்து விபத்துக்குள்ளானதைக் கண்டதும், பயந்துபோன பயணிகள் பேருந்தின் ஜன்னல்கள் வழியாகத் தாவி குதித்துத் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேறிய பிறகே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த விபத்தில் நான்கு பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த திடீர் விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தொடர்புடைய துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.