தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால், அணியை விட்டு வெளியேறுவோம் என நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் ஓ.பி.எஸ் அந்த கூட்டணியில் சேர்க்கப்படவில்லை. இதனால், அரசியல் களத்தில் அவர் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை விட்டு விலகிவிட்டனர்.
சமீபத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். இது அவர் தி.மு.க கூட்டணிக்கு நெருங்கி வருவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “தி.மு.க-வுக்கு செல்லலாமா?” என்ற விருப்பம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ்-ஸின் இந்த இரட்டை நிலைக்கு அவரது எஞ்சியுள்ள ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்டச் செயலாளர் பாரதியார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஆதரவாளர்கள் கூறியதாவது:
“சென்னையில் நடந்த கூட்டத்தில் தி.மு.க-வுக்கு செல்வது குறித்து விருப்பம் கேட்கப்பட்டது. 88 மாவட்டச் செயலாளர்களில் 11 பேர் மட்டுமே இதற்குச் சம்மதித்தனர். நாங்கள் அனைவரும் அ.தி.மு.க-வின் ரத்தமும் சதையுமானவர்கள். ஓ.பி.எஸ். தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தால், நாங்கள் யாரும் அவருடன் செல்ல மாட்டோம். ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வாகத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்; இல்லையெனில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர்.
மேலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என ஓ.பி.எஸ் அடிக்கடி கூறி வந்தார். தற்போது தை மாதம் முடிந்து மாசி மாதம் தொடங்கிவிட்ட நிலையிலும், அவர் இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்காமல் இருப்பது தொண்டர்களிடையே சோர்வையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
