தமிழகத்தில் நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவகாரம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், “கூட்டணி குறித்து முதல்வர் பார்த்துக் கொள்வார்; அவர்கள் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்” என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து வருகிறது. இக்கூட்டணியில் பிரதான அங்கமாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. எனினும், நீண்டகாலமாக நீடிக்கும் இந்த உறவில், தங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினரிடையே வலுக்கத் தொடங்கியுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைத் தாண்டி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு வாரியங்களில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது காங்கிரஸ் நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு திமுக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும், காங்கிரஸ் வெளியில் இருந்துதான் ஆதரவு அளித்தது. அப்போதும் ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு பங்கு கிடைக்கவில்லை என்பது அக்கட்சியினரின் தீராத ஆதங்கமாக இருந்து வருகிறது.

தமிழக அரசியலில் தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் மாநாட்டில், “கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும்” என அறிவித்தார். விஜய்யின் இந்த கருத்து, திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதன் எதிரொலியாக, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர்.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழக அரசியல் சூழலுக்குச் சரிவராது” எனத் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருப்பதாகவும், சிலர் குழப்பத்தை ஏற்படுத்தச் சதி செய்வதாகவும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “கூட்டணி தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார். அவர்கள் (காங்கிரஸ்) வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும். கூட்டணியை மட்டுமே நம்பி ஒரு கட்சியை நடத்த முடியாது” எனத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த நேரடியான கருத்து, திமுக – காங்கிரஸ் உறவில் மேலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.