சமூகத்தில் நிலவும் சில தயக்கங்களை உடைக்கும் விதமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் உதவியை மனிதாபிமானத்துடன் செய்த இரு சீக்கிய இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான இதயங்களை வென்று வருகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் தனக்குக் கடுமையான மாதவிடாய் வலி இருப்பது போலவும், தன்னால் மருந்தகம் சென்று சானிட்டரி நாப்கின்கள் வாங்க முடியவில்லை என்றும் அங்கிருக்கும் அந்நியர்களிடம் உதவி கோருகிறார். ஒரு சமூக சோதனையாக எடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், அந்தப் பெண் அங்கிருந்த இரு சீக்கிய இளைஞர்களை அணுகி மிகவும் தயக்கத்துடன் தனது நிலைமையைக் கூறி உதவி கேட்கிறார்.

பொதுவாக மாதவிடாய் என்பது குறித்துப் பொதுவெளியில் பேசப் பலரும் தயங்கும் சூழலில், அந்த இளைஞர்கள் இருவரும் அந்தப் பெண்ணின் நிலையைக் கேட்டு எந்தவித சங்கடமும் அடையவில்லை. மாறாக, மிகவும் கண்ணியத்துடனும், புரிதலுடனும் அந்தப் பெண்ணிற்கு உதவ முன்வந்தனர். சிறிதும் யோசிக்காமல், உடனே கடைக்குச் சென்று சானிட்டரி நாப்கின்களை வாங்கி வந்து கொடுத்து, மனிதாபிமானத்திற்குத் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தனர்.

 

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மாதவிடாய் போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தை அந்த இளைஞர்கள் கையாண்ட விதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இவர்கள் தான் உண்மையான பண்பாளர்கள். பெண்களின் உடல்நிலை சார்ந்த விஷயங்களில் இருக்கும் தயக்கத்தை உடைத்து, உதவி செய்வதே முதல் கடமை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். மனிதாபிமானத்திற்கு மதம், இனம், மொழி கிடையாது என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.