உலகின் முன்னணி நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்து வரும் நிலையில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தை ஆராயும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக நிலவுக்கு நெருக்கமாக சந்திராயன் மூன்று விண்கலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி நிலவை நோக்கி பயணித்த சந்திராயன் விண்கலத்தை நேற்று இரவு நிலவின் சுற்றுப் பாதையில் விஞ்ஞானிகள் செலுத்தியுள்ளனர். பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன் விண்கலத்தை இயக்கிய விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இஸ்ரோ  நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்துவது  மூன்றாவது முறையாகும். இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்தி குறிப்பில் நிலவின் சுற்றுப் பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை இன்று இரவு 10:30 மணி முதல்  11:30 மணிக்குள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நிலவுக்கு மிக அருகில் சந்திராயன் மூன்று சென்றிருப்பது அதன் பயணத்தின் முக்கியமாக கட்டமாக பார்க்கப்படுகிறது. வரும் 23ஆம் தேதி நிலவில் சந்திராயன் விண்கலத்தை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.