பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், தனது அரசியல் வாரிசை அதிகாரப்பூர்வமாக களமிறக்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, அவரது மகன் நிஷாந்த் குமார் நாளை (மார்ச் 9) அக்கட்சியில் முறைப்படி இணைய உள்ளார். நிதீஷ் குமார் தனது 73 வயதில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தச் சூழலில், அவருக்குப் பிறகு கட்சியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே நீடித்து வந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட நிஷாந்த் குமாரின் அரசியல் வருகை, நாளை நடைபெறவுள்ள பிரமாண்ட நிகழ்வின் மூலம் உறுதியாகிறது.

பாட்னாவில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் நாளை நடைபெறவுள்ள இவ்விழாவில், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைகிறார். இளைய தலைமுறையின் இந்த வருகை, பீகார் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஷாந்த் குமாரின் அரசியல் பிரவேசத்திற்கு நிதீஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துவிட்டதாக, மாநில அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான விஜய் குமார் சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். நிதீஷ் குமார் மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு நாட்களிலேயே, இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நிஷாந்த் குமாரின் வருகையானது, ஐக்கிய ஜனதா தளத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நிதீஷ் குமாருக்குப் பின் கட்சியின் எதிர்காலத் தலைவராக அவர் முன்னிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.