பிரபல பிரெஞ்சு மந்திரவாதி சேவியர் மோர்டிமர், மரணத்தின் விளிம்பு வரை சென்று நிகழ்த்திய ஒரு ஆபத்தான சாகச வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பிரபல சேவியர் மோர்டிமர், கூர்மையான ஆணிகள் கொண்ட படுக்கையில் மல்லாக்கப் படுத்துக் கொள்கிறார். அதன் பிறகு, அவர் மார்பின் மீது மற்றொரு ஆணிப் படுக்கை தலைகீழாக வைக்கப்படுகிறது. இதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக இரும்புப் பாதைகளின் வழியாக, சுமார் 3,000 கிலோகிராம் எடை கொண்ட டெஸ்லாவின் ராட்சத ‘சைபர்ட்ரக்’ (Tesla Cybertruck) கார் அவர் மீது ஏறிச் செல்கிறது.
அங்கிருந்த அனைவரும் பதற்றத்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நிற்க, அந்த ராட்சத வாகனம் கடந்த சில விநாடிகளில் சேவியர் காயமின்றி எழுந்து நின்றார். இருப்பினும், அவரது முதுகில் பதிந்திருந்த ஆழமான ஆணித் தழும்புகள் அந்த ஸ்டண்ட் எவ்வளவு கொடூரமானது என்பதைப் பறைசாற்றின.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சேவியர், இதுவே தனது வாழ்நாளின் மிகவும் ஆபத்தான சாகசம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்கிய அவர், “ஒரே ஒரு ஆணியின் மீது உடல் எடை விழுந்தால் அது உடலைத் துளைத்துவிடும். ஆனால், ஆணிப் படுக்கையில் உடல் எடை மற்றும் காரின் எடை பல நூறு ஆணிகளில் சமமாகப் பகிரப்படுவதால், எந்த ஒரு ஆணியும் உடலைத் துளைக்காது. இது பல நூற்றாண்டுகளாகத் துறவிகள் கடைப்பிடிக்கும் மன வலிமைக்கான பயிற்சி” என்று கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் பிரபல யூடியூபரான ‘iShowSpeed’-க்கும் இந்தச் சாகசத்தை நிகழ்த்த சேவியர் சவால் விடுத்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “சாகசம் என்ற பெயரில் இவ்வளவு பெரிய ஆபத்து தேவையா?” என்றும், “உயிரோடு விளையாடுவது முறையல்ல” என்றும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில், அவரது துணிச்சலைப் பாராட்டியும் கருத்துகள் குவிந்து வருகின்றன.
