அதிமுக-வில் நிலவி வரும் அதிகாரப் போட்டியில், இப்போது பந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பக்கம் திரும்பியுள்ளது! “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என்ற பெயரில் தனியாக இயங்கி வரும் ஓபிஎஸ், தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து நாளை (ஜனவரி 29) ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நாளை மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கைகோர்க்கப் போகிறோம் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

​ஏற்கனவே ஓபிஎஸ் அவர்கள் விஜய்யின் தவெக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வதந்திகள் பரவிய நிலையில், தவெக தரப்பு அதை மறுத்திருந்தது. இந்தச் சூழலில், ஓபிஎஸ் அவர்கள் பாஜக-வுடன் தொடருவாரா அல்லது புதியதொரு கூட்டணியை உருவாக்குவாரா என்பதுதான் இப்போது தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வி! “நாளை வரும் அந்த ஒரு அறிவிப்பு” ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.