திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பன் (30) என்ற இளைஞர், சில நாட்களுக்கு முன்பு நாய் கடித்ததில் ஏற்பட்ட காயத்திற்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காமல் கவனக்குறைவாக இருந்ததால், ‘ரேபிஸ்’ நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய் கடித்ததைத் தொடர்ந்து, காயத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தாமல்  விட்டதால், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. நிலைமை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தாமல் விட்டதன் விளைவாக ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்துச் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.