தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள உருக்கமான காணொளிச் செய்தி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தனது கட்சியினருக்கும் மக்களுக்கும் எழுச்சியூட்டும் வகையில் உரையாற்றிய அவர், “நாம் சாதாரண மனிதர்கள், நாம் சாகலாம் அல்லது தோற்கலாம். ஆனால் சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக எங்குமே பதிவுகள் இல்லை” என்று ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தனது கட்சியின் துணிச்சலைச் சுட்டிக்காட்டிய அவர், இயற்கை வளங்கள் சீரழிந்து வருவதையும், மொழி சிதைந்து வருவதையும் தடுத்து நிறுத்த மாற்றத்திற்கான ஒரே வழி உழைப்பு மட்டுமே என்று வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு ஆட்சியில் சரிபாதி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தனது பிறவிக்கடமை என்று குறிப்பிட்ட சீமான், பிற மொழி பேசும் தேசிய இனங்களை பகைத்துக்கொண்டு ஒரு இனத்தின் விடுதலையை வெல்ல முடியாது என்ற முதிர்ச்சியான கருத்தையும் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் நீர், காற்று, உணவு என அனைத்தும் நஞ்சாகி வரும் இன்றைய சூழலில், எதிர்கால சந்ததியினரைக் காக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாம் சத்தியத்தின் பக்கம் நிற்பதால் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும், வரலாறு நமக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
