
மத்திய அமைச்சரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அரசு 2028 ஆம் ஆண்டு வரை கட்டாயம் நீடிக்காது. காரணம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையில் தொடர்ந்து அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் எப்போது பூதாகரமாக வெடிக்கும் என்று தெரியாது. நாம் பொறுத்திருந்து பார்ப்போம். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை கவிழ்ப்பதற்காக நாங்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
அந்தக் கட்சி எம்எல்ஏக்களும் மக்களும் தான் ஆட்சி கட்டிலின் கால்களை ஆட்டம் காட்டி வருகிறார்கள். நிதி ஒதுக்கீடு என்பது தற்போது பெரிய சிக்கலாக உள்ளது. மாநில அரசு தகுந்த நிதி ஒதுக்காததால் எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க முடியாத சூழல் நிலவுகிறது. தொகுதிகளுக்கும் செல்ல முடியவில்லை. காங்கிரஸ் அரசு செயலற்று சென்று கொண்டிருக்கிறது. இப்படியே போனால் 2028 ஆம் ஆண்டு வரை தாக்குப் பிடிக்காது என்று தான் கூறுவேன். இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மக்கள் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருவார்கள். நான் மீண்டும் முதலமைச்சர் ஆவேன். அது 2028 ஆம் ஆண்டு நடக்கும். இதைக் கூற நான் ஒன்றும் ஜோதிடர் இல்லை. இருந்தாலும் இதை நான் உறுதியாக கூறுகிறேன் என்று பேசியுள்ளார்.