இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் (IPL) தொடரைத் தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட முடிவு செய்ததற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். தற்போது 38 வயதாகும் அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அதிக போட்டிகளில் விளையாடி ரன்களைக் குவிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மொயீன் அலிக்கு, வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இரண்டு முறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்ததால், போதிய ஆட்ட நேரம் கிடைக்காதது இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மேலும், ஐபிஎல் தொடருடன் ஒப்பிடும்போது பிஎஸ்எல் தொடர் குறுகிய காலத்தில் முடிவடைவது, தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவும், தனது கிரிக்கெட் பயணத்தை நீட்டிக்கவும் ஏதுவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “நான் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறேன் என்று உணர்கிறேன், இந்த வயதில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்யவே நான் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
தற்போது பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதை விட, தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
