ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், போட்டியின் பாதியில் ஏற்பட்ட மந்தநிலையே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று வருத்தம் தெரிவித்தார்.

மேலும் ஒருகட்டத்தில் 10 ஓவர் முடிவில் 111 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த சிஎஸ்கே-விற்கு, கடைசி 10 ஓவர்களில் 84 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அடுத்த 2 ஓவர்களில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு ஓவர்களில் ஏற்பட்ட ரன் வறட்சி மற்றும் விக்கெட் இழப்புகள் ஐதராபாத் அணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டதாக ருதுராஜ் விளக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “10-வது ஓவருக்குப் பிறகு அடுத்த 2 ஓவர்களில் நாங்கள் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தோம், அதுதான் ஆட்டத்தின் உத்வேகத்தை மாற்றியது. கடைசி ஓவர்களில் ஓவருக்கு 12 முதல் 13 ரன்கள் எடுப்பது கடினமானது” என்றார்.

இருப்பினும், எதிரணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய தனது பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டைப் பாராட்டிய அவர், குறிப்பாக அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை வெகுவாகப் புகழ்ந்தார்.