ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வரலாற்றுச் சாதனை படைக்கும் வகையில் பந்துவீச்சில் மிரட்டியது.
முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணிக்கு, புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஜோடி அசுர பலத்தைத் தந்தது. இவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி அணி நிலைகுலைந்தது. ஆட்டத்தின் பவர்பிளே முடிவில் டெல்லி அணி வெறும் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்தது.
ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும் (4/12), புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் (3/5) வீழ்த்தி டெல்லி அணியின் முதுகெலும்பை உடைத்தனர். டெல்லி தரப்பில் அபிஷேக் போரல் (30), டேவிட் மில்லர் (19) ஆகியோரைத் தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
ஆட்டத்தின் 16-வது ஓவரின் போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அந்த ஓவரை இளம் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா வீச வந்தார். அப்போது ஸ்லிப் திசையில் நின்றுகொண்டிருந்த விராட் கோலி, அங்கேயே தான் நிற்க விரும்புவதாக சுயாஷிடம் கெஞ்சினார்.
எதிர்புறம் குல்தீப் யாதவ் பேட்டிங் செய்ததால், “நானே இங்க நிக்கிறேன், என்னை இங்கேயே இருக்க விடு” என்பது போல கோலி செய்த சைகைகள் மற்றும் முகபாவனைகள் ரசிகர்களைச் சிரிக்க வைத்தன. ஆனால், பேச்சைக் கேட்காத சுயாஷ், கோலியை லெக் சைடு திசைக்குச் செல்லுமாறு பிடிவாதமாகக் கூறினார். வேறு வழியின்றி சிரித்துக் கொண்டே கோலி அங்கிருந்து நகர, அருகில் நின்ற ஜித்தேஷ் சர்மா விழுந்து விழுந்து சிரித்தார்.
The way Kohli tried convincing Suyash to let him stay at leg slip for one more over while Kuldeep was batting 😂❤️ pic.twitter.com/VUyxx2FhKD
— Suprvirat (@Mostlykohli) April 28, 2026
வேடிக்கை என்னவென்றால், கோலியை நகர்த்திய அதே ஓவரின் மூன்றாவது பந்திலேயே குல்தீப் யாதவை போல்ட் ஆக்கினார் சுயாஷ் சர்மா. சுயாஷின் அந்த லெக் பிரேக் பந்துவீச்சு டெல்லி அணியின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தது. மேலும் கோலியின் இந்த ஜாலியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
