நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் தோல்வியைப் பரிசளித்தது. 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ராஜஸ்தான், 4 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரான் ஹெட்மயர் இல்லாத குறையை, தென்னாப்பிரிக்க வீரர் டொனோவன் பெரைரா போக்கினார். வரிசையில் முன்னதாகக் களம் இறக்கப்பட்ட அவர், பஞ்சாப் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோரின் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 26 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த பெரைரா, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இவருக்குப் பக்கபலமாக விளையாடிய இளம் வீரர் துபே, 12 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அசத்தினார். இவர்களின் அதிரடியால், கடைசி 6 ஓவர்களில் தேவைப்பட்ட 71 ரன்களை ராஜஸ்தான் எளிதாகக் கடந்தது.

வெற்றிக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு சுவாரசியமான வீடியோவை வெளியிட்டது. அதில், பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் பெரைரா மன்னிப்பு கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் (பிரீத்தி ஜிந்தா) அணி விளையாடியபோது, “ஜிந்தாவின் அணி ஜெயிச்சிருச்சா?” (Zinta’s team won kya?) என சல்மான் கான் ட்வீட் செய்திருந்தார். அந்த பழைய பதிவு இப்போதும் வைரலாகி வரும் நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாக “ஸாரி பாய்.. இன்னைக்கு இல்ல!”  என்று பெரைரா கிண்டலாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணிக்கு மின்னல் வேகத் தொடக்கத்தைத் தந்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும், பெரைரா – துபே ஜோடியின் அதிரடியால் அந்தப் போராட்டம் வீணானது.

இந்தத் தோல்வி பஞ்சாப் அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் அணி தனது பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது