
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள மனோகர்பூர் கிராமத்தில், ஜிதேந்திர குமார் என்பவரின் மனைவி அனிதா தனது மகளுக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த ராகுலுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி. ஷிவானி என்ற மகளுக்காக ராகுலுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கல்யாணத்தை 10 நாட்களுக்கு முன் அனிதா தனது மருமகனுடன் ஓடி விட்டார்.
திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் நடந்த இந்த சம்பவம் இரு குடும்பங்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாமியாரும் மருமகனும் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அனிதா தன்னுடைய கணவர் அடிக்கடி மது அருந்தி, வேலைக்கு செல்லாமல் இருப்பதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அதனைத் தாங்க முடியாமல் ராகுலுடன் ஓடியதாகவும் தெரிவித்தார்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “என்னை என் கணவரும், மகளும் மனவேதனையால் துன்புறுத்தினர். ராகுல் எனக்கு ஆதரவாக இருந்தார். அவருடன் வாழ விரும்புகிறேன். நாங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை.
ஆனால் விவாகரத்து நடந்தாலும் இல்லாவிட்டாலும், நான் ராகுலுடன் தான் இருப்பேன்,” என்று அனிதா உறுதியாக தெரிவித்துள்ளார். இவரது வாக்குமூலம், போலீசாரிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.