ஹரியானாவின் குருகிராமில் 20 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் இவரது சொந்த தந்தை தீபக் யாதவ் (51). சம்பவம் நடந்த தினமான வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், மூன்று மாடி இல்லத்தின் சமையலறையில் காலை உணவு சமைத்து கொண்டிருந்த தனது மகளின் முதுகில் நான்கு தோட்டாக்கள் சுட்டதாக, அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு முன், தனது மகனிடம் பால் வாங்க வரும்படி கூறி, வீட்டிலிருந்து வெளியே அனுப்பியதும், தனியாக இருக்கும் தருணத்திலேயே மகளை சுட்டதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
தொடக்கத்தில் போலீசாரை தவறாக வழிநடத்திய தீபக் யாதவ், பின்னர் கொலை செய்தது உண்மையென்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் விசாரணையின் போதெல்லாம், வெவ்வேறு வாக்குமூலங்களை வழங்கி வந்துள்ளார். சமீபத்தில், “நான் ராதிகாவை கொல்ல திட்டமிட்டே செய்தேன். மகனைக் கூட வெளியே அனுப்பினேன். அவன் வீட்டில் இருந்திருந்தால் ராதிகா காப்பாற்றப்பட்டிருப்பாள்” என தெரிவித்துள்ளார். கொலை நடந்த நேரத்தில் அவரது மனைவி உடல்நலக் குறைவால் அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர், இந்த கொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மீட்கும் நடவடிக்கையாக கசானு பகுதியிற்கு செல்ல உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ராதிகா யாதவ் சடலத்திற்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் நான்கு தோட்டாக்கள் உடலில் தாக்கியது கண்டறியப்பட்டதாகவும், அதில் ஒரு தோட்டா எங்கு சென்றது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை குருகிராமில் உள்ள வஜீர்பாத் கிராம தகன மைதானத்தில் ராதிகாவின் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. அவரது மூத்த சகோதரர் தீரஜ் யாதவ் சடங்குகளை மேற்கொண்டார். ஒரு தந்தை தன் சொந்த மகளிடம் இத்தகைய கொடூரத்தை நடத்தக் கூடும் என்பதையே கிராம மக்கள் ஏற்க முடியாமல், முழு கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. நீதிமன்றத்தில் தீபக்குக்கு ஒருநாள் காவல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
