அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இருந்து, முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வென்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓபிஎஸ் அணியினர் தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ-வான வைத்திலிங்கம், தனது பதவியைத் துறந்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அடுத்தகட்டமாக, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுக பக்கம் செல்லத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. தற்போது அய்யப்பன் எம்.எல்.ஏ. மட்டுமே ஓபிஎஸ் வசம் உள்ளார்.
நிர்வாகிகளின் வெளியேற்றம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “அரசியலில் நீங்கள் சரியான முடிவெடுக்காததால்தான் நிர்வாகிகள் விலகிச் செல்கிறார்களா?” என்ற கேள்விக்கு, “நாங்கள் அரசியல் கட்சி அல்ல” என்று ஓ.பன்னீர்செல்வம் மழுப்பலாகப் பதிலளித்தார்.
மேலும், “தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறினீர்கள்; இப்போது தை பிறந்துவிட்டதே?” என்ற கேள்விக்கு, “தை மாதத்தில் இன்னும் 25 நாட்கள் பாக்கி உள்ளன” எனக் கூறிவிட்டுப் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
மேலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று நம்பிக்கையுடன் காத்திருந்த ஓபிஎஸ்-க்கு, தற்போது அவரது ஆதரவாளர்களே வெளியேறுவதால் ‘வலி’ தான் பிறந்துள்ளதாக அவரைப் பிரிந்து சென்ற நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர்.
