திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் தேர்தலைப் புறக்கணிப்பதாக அந்த பகுதி மக்கள் அறிவித்துவிட்டதால் காலை முதலே வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டியதன் அவசியத்தை போலீசார் அந்த மக்களுக்கு அறிவுறுத்தியும் அவர்கள் ஓட்டு போட முடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த லீலா என்ற பெண்ணுக்கு பெருமத்தூர் பகுதியில் வாக்குச்சாவடி மையம் இருந்ததால் அவர் மட்டும் வந்து அங்கு ஓட்டு போட்டார்.
அவர் போலீசாரால் பத்திரமாக அழைத்து வரப்பட்டு ஓட்டு போட்ட நிலையில் திடீரென அந்த பகுதியில் உள்ள பெண்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஓட்டு எப்படி போடலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனடியாக போலீசார் தலையிட்டு அந்த பெண்ணை மீட்டு பத்திரமாக அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.
