தலைநகர் டெல்லியில் நள்ளிரவு 12.15 மணி அளவில் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரது வண்டியில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது.

நள்ளிரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரை அழைப்பது என்று தெரியாமல் அவர் தவித்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு மர்ம நபர் தேவதூதன் போல வந்து நின்றார். அந்த நபர் தனது காலால் வாலிபரின் ஸ்கூட்டியைத் தள்ளிக்கொண்டு, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் வரை கொண்டு போய் சேர்த்துள்ளார்.

ஆபத்தான நேரத்தில் ஒரு பைசா கூட எதிர்பாராமல் அந்த நபர் செய்த உதவியை நினைத்து அந்த வாலிபர் நெகிழ்ந்து போயுள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் பகிர, அது காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.

“டெல்லி போன்ற பெருநகரங்களில் நள்ளிரவில் உதவி கிடைப்பது கடினம்; ஆனால் மனிதாபிமானம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி” என ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் அந்தப் பதிவில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.