நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது..

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ் அமைப்பினுடைய மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்த பரிசத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்பு தாய்  சுதா சர்மா, மாந்திரீகங்கள் மீதும் மூடநம்பிக்கை மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர் என தெரிவித்திருக்கிறார்.

தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே தனது பத்து வயது சகோதரனையும், மேலும் இதுவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால்  அவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க எவருக்கும் தைரியம் இல்லை எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

நரபலியிலிருந்து தப்பிப்பதற்காக நண்பனின் உதவியோடு பிப்ரவரி  17ஆம் தேதி சென்னை வந்துள்ளதாகவும், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் வீட்டில் தங்கி இருக்கும் தன்னை,  குடும்பத்தினரும் — ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என்று மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக தன்னை போபால் கொண்டு சென்றுவிட்டால் தன்னை நரபலி கொடுக்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அந்த மனுவில் அவர்  தெரிவித்து இருந்தார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதினால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று உய்ரநீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த நூற்றாண்டிலும் பில்லி, சூனியம் நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். அதேபோல நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் கோர்ட்டில் உறுதி தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்றம் பெண்ணின் பெற்றோர் பதில் மனு தாக்கல் செய்யவும், அதேபோல வளர்ப்புத் தாய் மீது பெண் அளித்த புகார் பற்றி போபால் காவல் ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.